Sunday, September 5, 2010

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி.


துபாய் : துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர சந்திப்பு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி 30.08.2010 திங்கட்கிழமை மாலை லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

துவக்கமாக ஜமால் முஹம்மது இறைவசனங்களை ஓதினார். கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் சமுதாயக் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்துவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பங்களிப்பு குறித்தும் அதற்காக சமுதாயத் தலைவர்கள் காயிதேமில்லத், சிராஜுல் மில்லத், முனீருல் மில்லத் உள்ளிட்டோர் ஆற்றிய ஆற்றிவரும் பணிகள் குறித்து விவரித்தார்.

ஈடிஏ அஸ்கான் குழும நலத்துறை மேலாளர் முஹைதீன் பாட்சா அத்துறை ஆற்றிவரும் நலப்பணிகள் குறித்து விவரித்தார்.

ஸ்டார் குழும பள்ளிகளின் கல்வித்துறை இயக்குநர் முனைவர் எஸ்.எம். கலந்தர் அவர்கள் தனது உரையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், தான் ஆய்வுப்பட்டத்திற்காக எடுத்துக் கொண்ட பொருள் குறித்தும் விவரித்தார்.

விழாப் பேருரை நிகழ்த்திய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது உரையில் பெற்றோருக்கும் பிள்ளைக்கும் எத்தகய உறவு இருக்குமோ அத்தகைய உறவு தான் கல்லூரிக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு.

ஜமால் முஹம்மது கல்லூரி துவங்கப்பட்டு அறுபது ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி பவள விழா எதிர் வரும் 2011 ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வருடந்தோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியும் ஜனவரி 26 அன்றே நடைபெறும்.

இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டும் என்றார்.

மேலும் இந்நிறுவனம் லாப நோக்கின்றி துவங்கப்பட்ட நிறுவனம். எவ்வித நன்கொடைகளும் வசூலிக்கப்படுவதில்லை.

நமது கல்லூரி முதல்வருக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் சார்பில் மிகச்சிறந்த பேராசிரியர் விருது பெறவும் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தியினை இந்நேரத்தில் தங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.

முன்னாள் மாணவர் என்ற முறையில் ஜமால் முஹம்மது கல்லூரி பெண்கள் விடுதி கட்ட பல்கலைக்கழக மான்யக் குழுவின் மூலம் அதிகபட்ச உதவி மற்றும் பல்வேறு உதவிகள் அரசுத்துறை மூலம் பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கி வருகிறேன்.

மேலும் கட்டாய திருமண பதிவுச் சட்டம், சமச்சீர் கல்வி பாடத்திட்டம், எனிமி பிராபர்டி பில் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் சமுதாயத்திற்கு பாதகம் ஏற்படாத வகையில் அவை செயல்படுத்தப்படுவதற்கு எனது பணிகளை மேற்கொண்டுள்ளேன். இவையனைத்திற்கும் தங்களது ஒத்துழைப்புகளை நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

நமது கல்லூரியானது அனைவரையும் அரவணைத்து சகோதரத்துவத்துவ மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் நாமும் கல்வி பயின்றோம் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

தாங்கள் கல்லூரியில் பயின்ற மலரும் நினைவுகளை ஈமான் அமைப்பின் ஆடிட்டர் எஸ்.எம். ஃபாரூக், ஜமால் முஹம்மது, திட்டச்சேர் ஹாமித் உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்டனர்.

ஜாபர் சித்திக் நன்றியுரை நிகழ்த்தினார். முதுவை ஹிதாயத் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்குப் பின் விருந்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

நிகழ்வில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள், ஈமான் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்தி : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ.)

No comments: