Thursday, June 16, 2011

குற்றாலத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


பசுமையான மலைத்தொடரும்,அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி குற்றாலம். அகத்தியர் கால் பதித்த திருத்தலம். தென்னாட்டின் மூலிகைக் குளியலறை அல்லது தென்னகத்து ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் இந்த குற்றாலம் ஏழைகளும் அனுபவிக்கும் இயற்கை அன்னையின் சீதனம். குற்றாலத்தின் குளுமையை அனுபவிக்கவே ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்நகருக்கு வந்து செல்கின்றனர். தென் தமிழ்நாட்டில் உள்ள புகழ்மிக்க அருவி நகரான குற்றாலத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

குற்றால சீசன் காலம்

தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிவிட்டாலே தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இந்த மழை நீர் நதியாக உருவெடுத்து, மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் அருவியாக கொட்டுகிறது. இந்த அருவி நீர் உடலையும், மனதையும் ஒருங்கே குளிர்வித்துக் கொண்டிருக்கும் இயற்கை அதிசயம்.

தென்மேற்குப் பருவ மழை உச்சத்தில் இருக்கும் பொழுது ஓயாத சாரலுடனும், பெருத்த காற்றுடனும், மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக வெள்ளியை உருக்கி விட்ட அருவிகளாகக் கொட்டுகிறது. அந்த உச்ச கட்ட பருவ காலத்தில் குற்றாலத்தில் தங்கியிருந்து அந்த இதமான சாரலை அனுபவிப்பது பொன்னான அனுபவம். ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் வரை அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலமே "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.

மூலிகைகளும், பழவகைகளும்

இந்த அருவி நீர் பல்வேறு மூலிகை குணங்கள் உடையனவாகவும், பல நோய்களுக்கு குணமளிப்பதாகவும் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன. பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை. இங்கு 2000 வகையான மலர்களும், செடிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற எண்ணற்ற பழ வகைகள் இந்த மலைகளில் காய்க்கின்றன. பல அறிய மூலிகைகள் மலையின் மேலும் பண்ணைகளிலும் வளருகின்றன.

ஒன்பது அருவிகள்

குற்றாலத்தில் மொத்தம் சிறிதும் பெரிதுமாக 9 அருவிகள் உள்ளன. பழைய அருவி, மெயின் பால்ஸ் என்று இனிய தமிழில் அழைக்கப் படும் பேரருவி, புலி யருவி, ஐந்தருவி, சிற்றருவி, புது அருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி என்று ஏழு அருவிகள் மலையைச் சுற்றி மலையடிவாரங்களிலும், தேனருவி, செண்பகதேவி என்று இரு அருவிகள் என்று மலையின் மேலேயும் அமைந்துள்ளன.

பேரருவியும், குற்றாலநாதரும்

மெயின் ஃபால்ஸ் எனப்படும் பேரருவி குற்றாலம் நகருக்குள் இருக்கிறது இந்த அருவி 91 அடி உயரத்தில் இருந்து மலையில் பாய்ந்து முதலில் பொங்குமாங்கடல் என்ற பள்ளத்தில் விழுந்து அதை நிரப்பி வழிந்து கீழே இறங்குகிறது. வெகு தூரத்தில் இருந்தே கண்களைக் கவரும் பேரருவி இது. தூரத்தில் இருந்து பார்க்க கண்களை அகலவெட்டாமல் லயிக்கச் செய்யும் எழில் மிகு அருவி இது. தண்ணீர் நிரம்பி விழும் காலங்களில் அந்த அருவி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தென்காசியிலிருந்தே காட்சியளிக்கும். பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருவிக்கரையில் அமைந்துள்ள குற்றாலநாதர் ஆலயம் சிவபெருமானின் பஞ்ச சபைகளில் சித்திர சபையாக திகழ்கிறது. இங்கு அகத்திய முனிவர் நிறுவிய பராசக்தி பீடமும் அமைந்துள்ளது.

சிற்றருவி



இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

செண்பகாதேவி அருவி

பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கிலோமீட்டர் கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தேனருவி

செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஐந்தருவி

குற்றாலம் நகரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருப்பது ஐந்தருவி. அழகிய மலைச்சாரல், சிறு சிறு ஆறுகள், பழத்தோட்டங்கள், தங்குமிடங்கள், ஒரு சிறிய ஏரி எல்லாம் தாண்டி வருகிறது ஐந்தருவி. இங்கு அருவி ஐந்து பிரிவாக வந்து விழுவதால் ஐந்தருவி என்று பெயர். திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது. அடர்ந்த கானகங்கள் நிறைந்த மலைத்தொடர். மலையின் மேலே, உயரத்தில் எங்கேயோ, எங்கிருந்தோ பல நூறடிகளுக்கு வெள்ளிக் கம்பியாக ஒரு அருவி விழுந்து மீண்டும் கானகத்திற்குள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)

ஐந்தருவிக்கு போகும் முன்பாக ஒரு கிளைப் பாதை பிரிந்து மலையின் மேல் செல்கிறது. கொஞ்ச தூரம் சென்றதும் அரசாங்கத்தின் பழத்தோட்டத் துறை நடத்தும் ஒரு பழப்பண்ணை வருகிறது. அந்த பண்ணையின் உள்ளே நுழைந்தால் அடர்ந்த வனத்தின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் இரு அருவிகள் அங்கே உள்ளன. அதற்குப் பழத்தோட்ட அருவி என்று பெயர். ஆனால் இந்த அருவியில் பொதுமக்கள் குளிக்க முடியாது. வி ஐ பிக்கள் மட்டுமே குளிக்க முடியும்.

புலியருவி

குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது.

பழைய குற்றாலம் அருவி

குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது.

பாலருவி


இது தேனருவி அருகே அமைந்துள்ளது.

சுற்றுலா மையங்கள்

குற்றாலத்தை சுற்றிலும் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் பல பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன. தென்காசி கோவில் அதில் முக்கியமானது. திருமலைக் குமரன் கோவில் என்று ஒரு அழகிய குன்றத்துக் குமரன் கோவில் தவற விடக் கூடாத இடமாகும். குன்றின் மேல் உள்ள கோவிலில் நின்று பார்த்தால் சுற்றி பச்சை பசலேன வயற்பரப்பும் சுற்றிலும் மேகம் கவிந்த குற்றால மலைத்தொடருமாக இயற்கை அன்னையின் எழில் நமது கண்களையும் மனதையும் ஒருங்கே கொள்ளை கொள்ளும். அருகில் உள்ள இலஞ்சி என்ற கிராமத்தில் ஒரு அழகிய முருகன் கோவில் உள்ளது.

கேரளா எல்லை அருவிகள்

குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையைத் தாண்டினால் ஆரியங்காவுக் கணவாயும், கேரளாவும், அச்சன் கோவிலும் வந்து விடும். கேரள எல்லையிலும் சில அருவிகள் உள்ளன. ஆளரவமில்லாத அற்புதமான அருவிகள் அவை. இன்னும் கொஞ்சம் தூரம் சென்றால் குற்றாலத்தின் நெரிசலைத் தவிர்த்தப் பச்சைப் பசேல் என்று போர்த்திக் கொண்ட அற்புதமான பாலருவி இருக்கிறது. தமிழ்நாட்டுப் பகுதிகளில் பாபநாசம் அகத்தியர் அருவியும், பாபநாசம் அணையும், பரிசலில் சென்றால் வரும் பாண தீர்த்தத்தையும் கண்டு குளித்து அனுபவிக்கலாம். ஒரு வாரம் தங்கி, கண்டு, ரசித்து அனுவவிக்க எண்ணற்ற இடங்கள் குற்றாலத்தைச் சுற்றி அமைந்துள்ளன.

அமைவிடம்

தென்காசியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது. தென்காசி ரயில் நிலையம் இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து குற்றாலத்திற்கு பேருந்து வசதி உண்டு. மதுரையிலிருந்து நிறைய பேருந்துகள் குற்றாலம் வரை செல்கிறது.

BY


A.A. HAJA MOHIDEEN
PANASONIC&IBM DIVISON.
KUWAIT.




No comments: