Tuesday, June 14, 2011

மண வாழ்க்கையில் வசந்தம் மலர சில ஆலோசனைகள்.



மண வாழ்க்கையில் வசந்தம் மலர சில ஆலோசனைகள்.

வீட்டில் செய்யும் சமையல் முதல் ஹோட்டலில் உண்ணும் உணவு வரை எதிலுமே சுவையும், அழகுணர்ச்சியும் வேண்டும் என்று நினைப்பது மனிதர்களின் இயல்பு.

புதிதாக திருமணமான தம்பதியர்களுக்கு இந்த எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கும். சமையலாகட்டும், தாம்பத்யமாகட்டும் எதிலுமே அழகுணர்ச்சியோடு கொஞ்சம் கற்பனை உணர்வும் கலந்திருந்தால் அதன் சுவையே அலாதிதான்.

என்ன செய்தால் பிடிக்கும் என்று குழம்பித் தவித்து தினசரி புதிது புதிதாக ஏதாவது முயற்சி செய்து கொண்டிருப்பவரா நீங்கள்? அப்படி என்றால் இது உங்களுக்கானதுதான். உங்கள் வாழ்க்கைத் துணையை கவருவதற்காக கூறப்பட்டுள்ள சில வழிமுறை பின்பற்றிப் பாருங்கள்

கற்பனையை வெளிபடுத்துங்கள்

இல்லறத்தின் இனிமையே தாம்பத்யம்தான். அதில் வழக்கமான முறையை பின்பற்றுவதை விட புதிது புதிதாக சில விஷயங்களை முயற்சி செய்யுங்கள். ஓவியம் வரையும் கலைஞனுக்குரிய கற்பனைத்திறனுடன் துணையை அணுகினால் உங்களுடைய துணையின் சந்தோஷத்திற்கு ஈடு இணையேது.

ஆச்சரியப்படுத்துங்கள்

பணிபுரியும் இடங்களில் புதிய புதிய சிந்தனைகளுக்குத்தான் வரவேற்பும் மதிப்பும் உண்டு. அதுபோலத்தான் இல்லறத்திலும். சினிமா சீன்களை உள்ளே புகுத்த வேண்டாம்.

சின்ன சின்ன ஆச்சரியங்கள். எதிர்பாராத சந்தோஷங்களை ஏற்படுத்துங்கள்.ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் இந்த சந்தோஷங்கள்தான் வாழ்க்கைப் பயணத்தின் கடைசி கட்டம் வரை தித்திப்பை தரும்.

சாதிக்க உற்சாகமளியுங்கள்

இன்றைய நவீன யுகத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் சாதித்து வருகின்றனர். சமையலறை மட்டுமே அவர்களின் உலகமல்ல என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். மனைவியின் திறமையை மதித்து அவர்களை ஊக்குவித்தால் அன்றைக்கே வாழ்க்கைத் துணைவருக்கு அடிமை சாசனம் எழுதித்தருவது நிச்சயம்.

ஆலோசனை கேளுங்கள்

புதிதாக ஒரு முடிவெடுக்கும் போது ஒருவருக்கொருவர் கலந்து ஆலோசனை செய்யுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலை பற்றியதாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் வாழ்க்கைத்துணையின் கருத்துக்கு மதிப்புக் கொடுங்கள்.

கட்டாயப்படுத்த வேண்டாம்

ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கும், அதை அடைவதற்கான கனவும் உண்டு. யாருக்காகவும் இலக்குகளை விட்டுவிட வேண்டாம். கனவுகளை கலைக்க கட்டாயப்படுத்தக் கூடாது.

அழகில் கவனம் செலுத்துங்கள்

அழகு, பெண்கள் மட்டும் சம்பந்தபட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்கு போகும்போது உங்கள் மனைவிக்கு மேட்சாக நீங்களும் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.

கெட்டிக்காரத்தனம் முக்கியம்

சமையலறை என்பது மனைவிக்கு மட்டுமே சொந்தமானது என்று நினைக்க வேண்டாம். நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரைத்தான் மனைவிக்கு அதிகம் பிடிக்கும்.

அக்கறை காட்டுங்கள்

வாழ்க்கையில் இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழப் பழக வேண்டும். துணையிடம் மட்டுமல்ல அவரின் குடும்பத்தினரிடமும் அக்கறை காட்டுங்கள்.

சில நேரங்களில் இது அவசியம்

எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வப்போது, சில வசனங்களை பேசுவதில் தவறில்லை. உன்னைத் தவிர இந்த உலகத்தில் சிறந்தது எதுவுமே இல்லை என்பது போல பேசினால் வானத்தில் பறக்க ஆரம்பித்து விடுவார் உங்கள் மனைவி.

பகிர்ந்து கொள்ளுங்கள்

தனிமையான தருணங்களில் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களை பற்றியும் பேசுங்கள்-போரடிக்காத வகையில். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளுங்கள்



BY

A A HAJA MOHIDEEN
PANASONIC & IBM DIVISION
KUWAIT.


No comments: