Thursday, October 15, 2009

என்னைப் போல் ஒருவனா நீ? (சினிமா விமர்சனம் : ஞாநி)


உன்னைப் போல் ஒருவன் என்று படத்தின் தலைப்பு சொல்கிறது. பார்வையாளனான என்னைப் பார்த்து உன்னைப்போல் ஒருவன் என்று சொல்வதாகத்தான் பெரும்பாலும் அர்த்தப் படுத்திக் கொள்கிறோம். அது சரியான அர்த்தம் தானா? படத்தில் பெயர் இல்லாத நாயகனே, என்னைப் போல் ஒருவனா நீ?! நான் மனசாட்சியின் குரலுக்கு எப்போதும் செவி கொடுக்கிற ஒரு நடுத்தர வகுப்பு மனிதன்.

என்னால் பிறருக்கு வலியும், பிறரால் எனக்கு வலியும் ஏற்படக்கூடாது என்று விரும்பும் சாதாரண மனிதன். ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் மனிதரை மனிதர் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாது என்று விரும்பும் ஒருவன். குற்றம் சாட்டப்பட்ட எவரும் முறையாக விசாரிக்கப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறவன். கொலைக் குற்றவாளிக்குக் கூட அதிகபட்சமாக ஆயுள் தண்டனையே தரப்படலாமே தவிர, மரண தண்டனை கூடாது என்று நினைக்கிறவன்.

சட்டத்தை என் கையில் எடுத்துக் கொள்ள ஆசைப்படாதவன். நீ என்னைப் போல் ஒருவனா? நிச்சயம் இல்லை. எனக்கு எல்லா தீவிரவாதமும் அருவருப்பானது. நீ இஸ்லாமிய தீவிரவாதத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து எதிர்க்கிறாய். மேலவளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் தலைவர் முருகேசனைக் கொன்றவர்களும், தருமபுரியில் அப்பாவியான கல்லூரி மாணவிகளை பேரூந்திலேயே வைத்து எரித்தவர்களும், மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்கி அப்பாவி ஊழியர்களைக் கொன்றவர்களும் இது போன்ற எண்ணற்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் பலரும் தமிழகச் சிறையில் தான் இருக்கிறார்கள்.

அவர்களை விசாரணை இல்லாமல் கொல்ல வேண்டும் என்ற கோபம் உனக்கு வரவில்லை. இஸ்லாமிய தீவிரவாதிகளையும் அவர்களுக்கு உதவி செய்ததால் ஹிந்து வெடிமருந்து வியாபாரியையும் கொல்லப் புறப்படுகிறாய்.

உனக்கு ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து விற்றவன் மட்டும் மகாத்மா காந்தியா? அவனை ஏன் கொல்லாமல் விட்டிருக்கிறாய்? அவனிடம் ஆர்.டி.எக்ஸ் தொடர்ந்து வாங்கியவர்கள் / வாங்குகிறவர்கள் எல்லோரும் உன்னைப்போல தீவிரவாத எதிர்ப்பாளர்களா என்ன? இஸ்லாமிய தீவிரவாதிகளை போலீஸ் பிடித்தால் உடனே சுட்டுக் கொன்றுவிட வேண்டும் என்று சொல்லுகிற இந்து தீவிரவாதத்தின் குரலாகவே நீ பேசுகிறாய்.

அப்படிச் செய்யாமல் போலீஸ் இருப்பதில் எரிச்சலடைந்து மிரட்டல் வேலையில் ஈடுபடுகிறாய். எந்த மதத்து தீவிரவாதியான இருந்தாலும் சரி, அவர்களை விசாரிக்காமல் சுட்டுக்கொன்றுவிட வேண்டும் என்று நினைக்கிறவர்கள் சார்பாக புறப்பட்டு வந்தவனும் அல்ல நீ. அப்படி நினைக்கிறவர்கள் கருத்தை ஏற்பதாக இருந்தால், மசூதியை இடித்து மதக்கலவரங்களை உற்பத்தி செய்த அத்வானியையும் அரசு இயந்திரத்தின் உதவியோடு முஸ்லிம்களை கும்பல் கும்பலாகக் கொல்ல ஏற்பாடு செய்த மோடியையும் சுட்டுக் கொல்ல நீ புறப்பட்டிருப்பாய்.

ஆனால் உனக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கிறது. நீ என்னைப்போல் ஒருவன் அல்லவே அல்ல. நான், குற்றம் சாட்டப்படுவர் மோடியானாலும், முகமது ஆனாலும் சரி முறையான நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றே வலியுறுத்தும் சாமான்யன்.

உன்னைப் போல் ஒருவன் என்று நீ சொல்வது என்னையல்ல என்றால், யாரைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கிறாய்? படத்தில் இன்னொரு நாயகனாக வருகிற காவல் அதிகாரியைப் பார்த்துத்தான்.

அதுதான் அசல் அர்த்தம். நாங்கள் தான் எங்களைச் சொன்னதாக தப்பாக எடுத்துக்கொண்டிருக்கிறோம். அந்தக் காவல் அதிகாரி யார்? முதலமைச்சர், தலைமைச் செயலாளர் எல்லோரும் முழு அதிகாரத்தைத் தன்னிடம் கொடுத்தால் தான் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று மிரட்டுபவர் அவர்.

முழு அதிகாரமும் போலீஸிடம் இருந்தால் தான் விசாரணையில்லாமல் சுட்டுக் கொல்ல முடியும் அல்லவா? அவர் கருத்தும் உன் கருத்தே தான். கடைசியில் நீ கேட்டபடி அந்தத் தீவிரவாதிகளை ஒப்படைக்கிறார். மூன்று பேர் ஜீப் குண்டில் செத்ததும் நீ அவர் ஆள்தான் என்பது அவருக்குத் தெரிந்துவிடுகிறது.

நீ எந்த இடத்திலும் குண்டு வைக்கவில்லை அது வெற்று மிரட்டல் தான் என்று பின்னர் போனில் சொல்லும்போது அது தனக்கு முன்பே தெரியும் என்கிறார்.

அப்படி தெரியுமென்றால், நான்காவது தீவிரவாதியை சுட்டுக்கொல்லும்படி அவர் சொல்லியிருக்கத் தேவையே இல்லையே. உன் மிரட்டலை சாக்காக வைத்து அவர் அந்தத் தீவிரவாதிகளை விசாரணையில்லாமல் கொல்லும் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறார் என்பது தான் உண்மை.

கடைசியில் நீ இருக்கும் இடத்தையும், உன்னையும் கண்டுபிடித்த பிறகு உன்னை சுட்டுக் கொல்லாமல் கைகுலுக்கி வழியனுப்பி வைக்கிறார். ஏன்? நீ அவரைப்போல் ஒருவன் என்பதனால்தான். காவல் துறை என்கவுன்ட்டர் என்ற பெயரில் விசாரணையில்லாமல் தான் கொல்ல விரும்புபவர்களைக் கொல்லும் வசதிக்காக, உன்னைப் போன்றவர்களை மறைமுகமாக ஆதரிக்கும் என்பதுதான் உன்படத்திலிருந்து எனக்குக் கிடைக்கும் முக்கியச் செய்தி. நீ நிச்சயம் என்னைப் போல் ஒருவன் அல்ல. நான் நிச்சயம் உன்னைப்போல் ஒருவனாக இருக்க விரும்பவே மாட்டேன்.

நன்றி : குமுதம் வார இதழ் 14.10.2009

No comments: