Friday, October 14, 2011
காரைக்காலில் கல்லூரியின் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து மாணவி பலி
காரைக்கால், அக். 14 காரைக்காலில் மகளிர் கல்லூரியின் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து மாணவி ஒருவர் வெள்ளிக்கிழமை (இன்று) உயிரிழந்தார்.
காரைக்கால் மாவட்டம் நிரவி கீழராஜ வீதியை சேர்ந்தவர் நைனாமுகமது. இவர் வெளிநாட்டில் உள்ளார். இவரது மகள் மெஹபூப் நிஷா (19). காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. மனையியல்துறை முதலாமாண்டு படித்துவந்தார். வழக்கம்போல் வெள்ளிக்கிழமை காலை கல்லூரிக்கு வந்தவர், வகுப்பறை பூட்டப்பட்டிருந்த நிலையில், எதிரே இருந்த உயரமான கட்டையில் புத்தகப் பையை வைத்துவிட்டு இரண்டாவது மாடியில் நின்றுகொண்டிருந்தாராம். அப்போது அருகே இருந்த திறந்த ஜன்னல் வழியே குரங்கு வந்திருக்கலாமென கூறப்படுகிறது. இதில் பயந்து தப்பிக்க கட்டையிலிருந்து தவறி கீழே விழுந்திருக்கலாமென மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் வெளியேறியது.
இவர் விழுந்தவுடன் உடனே யாரும் பார்க்கவில்லை. உயிருக்குப் போராட்டிய மாணவியை சக மாணவிகள் பிறகு பார்த்து நிர்வாகத்துக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்து கல்லூரிக்கு அருகிலிருக்கும் காவல்துறை அலுவலகத்திலிருந்து போலீஸார் ஒருவர் விரைந்து சென்று மாணவியை தூக்கிக்கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
விபத்து சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையளித்துக்கொண்டிருந்த நிலையில் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து அவரது குடும்பத்தாரும், கல்லூரி மாணவிகளும் சென்று உயிரிழந்த மாணவியை பார்த்து அழுது, சோகத்தில் ஆழ்ந்தனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் புதுச்சேரியிலிருந்து காரைக்கால் வந்த நலத்துறை அமைச்சர் பி.ராஜவேலு, காரைக்கால் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம், கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ.எஸ்.டி.அன்சாரிபாபு ஆகியோர் உயிரிழந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். மாணவி இறப்பால் கல்லூரிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment