Sunday, June 19, 2011
உறவுச் சங்கிலியின் நெருக்கம் அதிகரிக்க...
இல்லற பந்தத்தில் கணவன் மனைவிக்கு இடையேயான உறவு என்பது மிகவும் புனிதமானது. வெவ்வெறு தளங்களில் இருந்து வந்திருக்கும் இருவர் இணைந்து வசிக்கும் போது அவர்களுக்கிடையேயான பரஸ்பரம் புரிதலும் அன்புமே வாழ்க்கை பயணத்தில் இனிமையை கூட்டும். அபரிமிதமான அன்பும், எதிர்பார்ப்பில்லாத நேசமுமே உறவுச்சங்கிலியின் நெருக்கத்தை அதிகரிக்கும்.
பிறந்து வளர்ந்த இடங்களையும் உறவுகளையும் விட்டு விட்டு கணவனின் வீடே உலகம் என்று வரும் பெண்ணிற்கு சரியான பாதுகாப்பினை வழங்கவேண்டியது கணவனின் கடமை. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் கணவனுக்காக எதை வேண்டுமானலும் செய்ய மனைவி தயாராகி விடுகிறாள். மனைவியின் நன்மதிப்பு புத்தகம் எனப்படும் ‘குட்புக்’ கில் இடம் பெற கணவன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
அதிக நேரம் செலவிடுங்கள்
மனைவி என்பவர் உங்களை மட்டுமே நம்பி வந்தவர். அவருக்காக அதிக நேரம் செலவிடுவது ஒன்றும் தவறில்லை. உறவுகளும் மிகவும் முக்கியம் தான். ஆனால் வாழ்க்கையின் அனைத்து சுக துங்கங்களையும் சரிபாதியாக பகிர்ந்து கொள்ளும் மனைவிக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குவதில் தவறொன்றும் இல்லை.
பொழுது போக்கில் ஆர்வம்
அதிகாலை எழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கணவருக்காகவும், அவரது குடும்பத்திற்காகவும் நேரத்தை செலவிடுகின்றனர் பெண்கள். அவர்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அக்கறை காட்டுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்
பொறுப்பான தந்தையாக நடந்து கொள்ளுங்கள்
கணவனுக்கு அடுத்தபடியாக பெண்கள் அதீத அக்கறை செலுத்துவது குழந்தைகள் மீதுதான். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் பெண்களுக்கு எந்த அளவிற்கு உரிமையும் கடமையும் இருக்கிறதோ அதே அளவு ஆண்களுக்கும் உண்டு. குழந்தைகளுக்கு பொறுப்பான தகப்பனாக நடந்து கொள்ளும் ஆண்களை கொண்டாடும் பெண்கள் அதிகம் உள்ளனர்.
மனைவியின் நட்புக்கு மதிப்பு
ஆண்களுக்கு என்று நட்பு வட்டம் இருப்பதைப் போல பெண்களுக்கு உயிர்தோழிகள் உண்டு. திருமணத்திற்குப் பிறகு அதை தொடர முடியவில்லையே என்ற ஏக்கம் அநேகம் பேருக்கு ஏற்படுவதுண்டு. மனைவியை அழைத்துக்கொண்டு அவரது தோழிகளின் வீட்டுக்குச் சென்று நட்பை புதுப்பிப்பதில் தவறொன்றும் இல்லை.
பரிசுப் பொருட்களால் அசத்துங்கள்
ஒவ்வொரு பெண்ணிற்கும் விலை மதிப்பில்லாத பரிசுப்பொருள் கணவன் மட்டுமே. இருந்தாலும் கணவர் ஒரு முழம் வாங்கிக் கொடுத்தாலே அதை நான்கு பேரிடம் சொல்லி பெருமைப் பட்டுக்கொள்வார்கள். பிறந்தநாள், திருமணநாள் என வாழ்வின் முக்கிய தருணங்களை நினைவில் வைத்துக்கொண்டு அந்த நாளில் மனைவிக்கு பரிசுகளை வாங்கித்தந்து அசத்துங்கள். எந்த சந்தர்ப்பத்திலும் திருமண நாளை மறந்துவிடாதீர்கள்.
விடுமுறையை அனுபவியுங்கள்
ஆண்டு முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மனைவியை ஆண்டுக்கு ஒருமுறையாவது வெளியூருக்கு அழைத்துச் சென்று வாருங்கள். அது அவர்களுக்கு பரவசமான தருணமாக இருக்கும்.
இவற்றை சரியாக கடைபிடித்தாலே உறவுபந்தத்தின் நெருக்கம் அதிகரிக்கும். எந்த சந்தர்ப்பத்திலும் யாருக்காகவும் மனைவி உங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்.
BY
A A HAJA MOHIDEEN
PANASONIC & IBM DIVISION
KUWAIT.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment