Thursday, March 3, 2011
திட்டச்சேரியிலிருந்து ஒரு சர்வதேச சாதனைச் செல்வி
திட்டச்சேரியிலிருந்து ஒரு சர்வதேச சாதனைச் செல்வி
உலகம் முழுவதிலும் கேம்ப்ரிட்ஜ் IGCSE தேர்வு முறையைப் பின்பற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கு பெற்ற ஏறத்தாழ 2000 பள்ளிகளின் மாணவ-மாணவியர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதின்மருள் ஒருவராகக் கல்வியில் வாகை சூடுவது என்பது - அதிலும் "அ" தாரகை(A Star) ஆக ஜொலிப்பதென்பது - சாதாரணச் செயலன்று.
இந்த அசாதாரண சாதனையை, நாகை மாவட்டம் திட்டச்சேரியைச் சேர்ந்த செல்வி சல்மா புரிந்திருக்கிறார்.
ஆண்டுதோறும் கேம்ப்ரிட்ஜ் பலகலைக் கழக உலகளாவியத் தேர்வுகள்(University of Cambridge International Exams - CIE)' மையம் நடத்தும் 'உலகளாவிய உயர்நிலைப் பள்ளிக் கல்வி(International General Certificate of Secondary Education)'யின் 2009ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் கடந்த அக்டோபர் 2009இல் நடைபெற்றன. அவற்றின் முடிவுகள் கடந்த பிப்ரவரி 2010இல் வெளியாகின. உலகளாவிய ஒப்பீட்டு முடிவுகள் கடந்த வாரம் வெளியாகியுள்ளன.
மேற்காணும் உலகளாவிய தேர்வுக்கு, மூலாதாரப் பாடத்திட்ட (The core syllabus) முறையில் 5 கட்டாயப் பாடங்களைத் தேர்வு செய்து "இ" படிநிலை விருதை வெல்லும் எளிய வழியையே பெரும்பாலான மாணவ-மாணவியர் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், "அ-தாரகைப் படிநிலை விருதை வென்றெடுப்பதற்காக ஆழமான படிப்புத் தேவைப்படும் பத்துப் பாடங்கள் அடங்கிய மீநிலைத் (Advanced syllabus) திட்டத்தை எனது தேர்வாகக் கொண்டேன்" என்கிறார் சல்மா.
நினைத்தபடியே சிறப்பாகத் தேர்வெழுதி பத்துப் பாடங்களில் ஒவ்வொன்றிலும் 95+% பெற்றிருப்பதால் செல்வி சல்மா, "அ" தாரகை(A Star) விருது வழங்கப் பெற்றுள்ளார். இது சர்வதேச அளவிலான சிறப்பான விருதாகும்.
செல்வி சல்மாவின் பிற சாதனைகள்:
· ஆங்கில இலக்கியத்தில் சர்வதேச அளவில் முதலிடம்.
.உயிரியலில் சர்வதேச அளவில் மூன்றாமிடம்.
· புவியியலில் சர்வதேச அளவில் ஒன்பதாமிடம்.
செல்வி சல்மா, தம் பெற்றோருடன் செசல்ஸ் தீவில் வசித்து வருகிறார். படிப்பும் அங்கேதான். ஆண்டுக்கு ஒருமுறை பள்ளி விடுப்பின்போது தம் குடும்பதினரோடு தம் தந்தை முஹம்மது ஃபாரூக்கின் ஊரான திட்டச்சேரிக்கு வந்து போவது வழக்கம்.
அவ்வாறு இந்த ஆண்டு விடுப்பில் திட்டச்சேரிக்கு வந்திருக்கும் வேளையில், "எழுதுவதென்றால் எனக்குக் கொள்ளை ஆசை. எனது புதினமும் (Novel) ஒருநாள் பதிவேறும்" என்று உறுதியுடன் கூறுகிறார் காமன்வெல்த் நாடுகளுக்கான கட்டுரைப் போட்டிகளில் மும்முறை பங்குபெற்ற செல்வி சல்மா.
சாதனைச் செல்வி சல்மாவை சத்தியமார்க்கம்.காம் உளமாற வாழ்த்துகிறது!
மூலம் : P.V. Srividya - The Hindu
நன்றி : சத்தியமார்க்கம்.காம்
ஜாஸ்மீன், சல்மா போன்ற சகோதரிகள் சாதித்ததை போன்று நம் சகோதரர்களும் சாதிக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment