Wednesday, March 2, 2011

ஆண்டு விழாவா? ஆட்ட விழாவா?

மார்ச் ஏப்ரல் என்றவுடன் மாணவச்செல்வங்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு நினைவில் வரும் அதே வேளையில் ஆண்டு விழாக்களும் நினைவில் வருவது தவறுவதில்லை.

ஆண்டு விழாக்களை நடத்துவதின் நோக்கமானது கடந்த ஆண்டு பள்ளிக்கூடங்களின் சாதனைகள், பள்ளி மாணவ மாணவிகளின் சாதனைகள், திறமைகள், சிறப்புகளை அரங்கேற்ற வேண்டும் என்பதே. ஆனால் தற்போது ஆண்டு விழா என்றவுடன் ஆசிரியர்களின் நினைவிற்கும், பெற்றோர்களின் நினைவிற்கும் முதலில் வருவது ஆட்டமும் பாட்டமுமே.

ஜனவரி வந்துவிட்டாலே ஆசிரியர்கள் மாணவச்செல்வங்களை தேர்வுக்கு தயார் படுத்துகிறார்களே இல்லையோ எந்தெந்த சினிமா பாட்டிற்கு யாரை ஆடவைக்கலாம், எந்த பாட்டிற்கு ஆட வைக்கலாம், எந்த பாட்டிற்கு யார் பொறுத்தமாக இருப்பார்கள் என்று சிந்திக்க தொடங்கிவிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

இதில் நாம் வருந்த வேண்டிய விஷயம் என்னவென்றால் நம் இஸ்லாமிய பெற்றோர்களும் தமது குழந்தைகளையும், பருவ வயதுடைய பெண்களையும் மேடையில் நூற்றுக்கணக்கான அந்நியர்களுக்கு முன்னிலையில் ஆடுவதற்கு ஊக்கமளிப்பதுதான். அதிலும் சில இஸ்லாமிய தாய்மார்களோ பள்ளிக்கூட ஆசிரியர்களிடம் கெஞ்சிகிறார்கள்.

அதுபோல் பெற்றோர்கள் ஆசிரியகளிடம் சினிமா, ஆட்டம் பாட்டம் போன்றவற்றில் தமது குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பிறகும் பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் இதுபோன்ற இழிச்செயலை அரங்கேற்று கட்டாயப்படுத்தப்படுவதையும் நாம் மறுப்பதற்கில்லை.

அன்பார்ந்த தாய்மார்களே! இஸ்லாத்திற்கு துளியும் தொடர்பில்லாத, இதுபோன்ற பாவச்செயலை செய்யும்படி நம் குழந்தைச்செல்வங்களை நாம் ஊக்கப்படுத்துவோமேயானால் மறுமையில் நிச்சயமாக நாம் நஷ்டவாளியாகவே இருப்போம்.

நற்போதனைகளையும், நற்செயல்களையும் கற்பிக்க வேண்டிய நாம் ஆண்டு விழாக்களில் நடைப்பெறும் ஆட்டம்,பாட்டம் போன்ற அசிங்கமான செயல்களில் நம் பிள்ளைகளும் ஈடுபட வேண்டும் என்று நினைப்பதும், அதை கண்டு இரசிக்க முனைவதும் கண்டிப்பாக பாவமான செயலாகும்.
பெற்றோர்களே! எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருந்து ஆசிரியர்கள் எவ்வளவுதான் நிர்பந்தம் கொடுத்தாலும் ஆட்டம் பாட்டம் போன்ற இழிச்செயலிலிருந்து நம் மாணவச்செல்வங்களை காத்திடுவோம்.
சினிமா பாட்டிற்கு ஆட்டம் போடுவதால் ஏற்படும் அற்பமான சந்தோஷம் நம்மை நரகத்தில்தான் கொண்டு சேர்க்கும் என்பதை நாம் மனதில் நிலை நாட்டிக்கொள்வோம்.


வெளிநாடுகளில் வாழும் ஆண்களும், தந்தையர்களும் தத்தமது வீட்டு மாணவர்கள் ஆண்டு விழா மேடை போன்றவைகளில் ஆட்டம் பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்க வீட்டில் உள்ளவர்களிடம் எச்சரிக்கை செய்யுங்கள். தமது குழந்தைகளிடமும் ஆசிரியர்களின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் ஆட்டம் பாட்டங்களிலிருந்து விளகியிருக்க அறிவுரைக்கூறுங்கள்.

''செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.'' (அல் குர் ஆன்: 18:46)

No comments: